சாதி வெறி பிடித்தவனை ஹீரோவாக கொண்டாடும் நெட்டிசன்கள்... மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்
மாமன்னன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் அப்படம் இணையத்தில் மீண்டும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதன் பின்னணியை பார்க்கலாம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். குறிப்பாக வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்திருந்தனர். அதோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ், மாமன்னன் பட ஆடியோ லாஞ்சில் கமல் முன்பே தேவர்மகன் படத்தை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இப்படத்தில் தான் தேவர்மகன் படத்தில் வரும் இசக்கி கேரக்டரை வைத்து தான் எடுத்துள்ளேன் என்றும் கூறி இருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது மாமன்னன்.
இதன்பின்னர் படம் கடந்த ஜூன் 29-ந் தேதி ரிலீஸ் ஆன பின்னர், படத்தை பார்த்த ஏராளமானோர் இது முன்னாள் சபாநயகர் தனபாலின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை படமாக்கி இருப்பதாக கூறினர். ஒருசிலரோ இது திருமாவளவனை பற்றியது என்றும் ஒப்பிட்டு பேசினர். இறுதியாக சமூக நீதி மற்றும் சமத்துவம் பற்றி நேர்த்தியாக அரசியல் பேசிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.72 கோடி வசூலித்து இருந்தது.
வழக்கமாக ஒருபடம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும். அந்த வகையில் மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்கள் கழித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 27-ந் தேதி ரிலீஸ் ஆனது. ஓடிடியிலும் மாமன்னன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் தான் தற்போது நெட்பிளிக்ஸில் இந்தியளவில் அதிகம் பார்க்கப்படும் படமாக உள்ளதோடு, டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... தியேட்டரில் டபுள் மடங்கு லாபம் பார்த்த ‘மாமன்னன்’... இப்போ ஓடிடி-க்கு வந்தாச்சு! மொத்த வசூல் நிலவரம் இதோ
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மாமன்னன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் அது சமூக வலைதளங்களில் வேறு விதமாக டிரெண்டாகி வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமன்னன் படத்தில் சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரமான ரத்னவேலு என்கிற கேரக்டரில் பகத் பாசில் நடித்திருந்தார். அவரின் கேரக்டர் சற்று மாஸ் ஆனதாக காட்டப்பட்டு இருக்கும்.
தற்போது அந்த கொடூர வில்லன் கதாபாத்திரத்தை ஹீரோ போல் சித்தரித்து இணையத்தில் பதிவிடப்படும் மீம்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவரது கேரக்டருக்கு எந்தப் பாடல் போட்டாலும் செட் ஆகிறது எனக் கூறி விதவிதமான பாடல்களை போட்டு பகத் பாசில் கேரக்டரை கொண்டாட தொடங்கி உள்ளனர்.
இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும், அதன்பின்னணியில் இருக்கும் ஆபத்து தான் தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது. இந்த வீடியோவை பல்வேறு சாதியை சேர்ந்தவர்களும், தங்கள் சாதி பெருமை பேசும் பாடல்களோடு எடிட் செய்து வருவதால், இது இளம் தலைமுறையினர் மத்தியில் சாதிவெறியை தூண்டிவிடுமோ என்கிற அச்சமும் எழத் தொடங்கி உள்ளது.
சிலரோ பகத் பாசில் போன்ற ஒரு தரமான நடிகரை வில்லனாக நடிக்க வைத்தால் இதுதான் பிரச்சனை என பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் மாமன்னன் படம் மாரி செல்வராஜுக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளதா? தொலைக்காட்சியில் இன்று என்ன ஸ்பெஷல்?