அஜீத்தின் அடுத்த படமான ‘நேர்கொண்ட பாட்ர்வை’ படப்பிடிப்பு துவங்கிய சில நாள்களிலேயே நாம் எழுதியிருந்தபடி படத்தின் ரிலீஸ் தேதி மே1 ல் இருந்து ஆகஸ்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை அஜீத் தனது மேனேஜர் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் கடந்த இரு மாதங்களாக படப்பிடிப்பு நடந்துவரும் ‘நேர்கொண்ட பார்வையின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது. பட பூஜையின்போது அஜீத் தரப்பிலிருந்தும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தும் இப்படம் அஜீத்தின் பிறந்தநாளான மே1ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் விஸ்வாசம் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் குறைந்த பட்சம் எட்டுமாத இடைவெளியாவது இருக்கவேண்டும் என்று அஜீத் விரும்புகிறார் என்றும் ‘நேர்கொண்ட பார்வையும் அதிரடி வெற்றி அடைய வேண்டுமானால் இயக்குநருக்கு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவை என்பதாலும் பட ரிலீஸ் தேதி கண்டிப்பாக தள்ளி வைக்கப்படும் என்றும் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நாம் எழுதியிருந்தோம்.

இந்நிலையில் படம் மே1ல் வராது அது ஆகஸ்ட் 10ம் தேதிதான் ரிலீஸாகும் என்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமையாதலால் அப்பதிவின் கீழ் சில அஜீத் ரசிகர்கள் ‘அய்யய்யோ சனிக்கிழமையா? அது நம்ம தலக்கு ஆகாத கிழமையாச்சே’ என்று அப்செட் கமெண்ட் போட்டுவருகின்றனர்.