அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படத்தை சென்னை தியேட்டர் ஒன்றில் அதிகாலை 4 மணி காட்சியில் பார்த்த பட நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத் ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பைக் கண்டு கண் கலங்கினார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்‘ படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் நேற்று வெளியாகியுள்ளது. ‘விஸ்வாசம்‘ படத்துக்கு பிறகு வெளியாகியுள்ள அஜித் படம் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் அஜீத்தின் ஜோடியாக வித்யாபாலன் நடித்திருந்தாலும் படத்தின் பிரதான நாயகி வேடத்தில் அபாரமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

திரையுலக பிரபலங்கள் பலருமே இந்தப் படத்தைத் தேர்வு செய்து நடித்ததிற்காக அஜித்தையும் ஸ்ரத்தாவையும்  பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காலை 4 மணிக்கு காட்சியில் ரசிகர்களுடன் ‘நேர்கொண்ட பார்வை’ படக்குழுவினரும் இணைந்து படத்தை கண்டுகளித்தார்கள். இசையமைப்பாளர் யுவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் காட்சி முடிந்தவுடன் வெளியே வந்த போது மிகவும் கண்கலங்கினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். 

நிருபர்கள் மத்தியில் பேசும் போது, “ரசிகர்களுடன் படம் பார்த்ததை மறக்க முடியாது. ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மிகவும் வலுவானவர்கள். படத்தின் மிக முக்கியமான வசனங்களைக் கவனிக்கிறார்கள். மாஸ் காட்சிகளுக்கு சந்தோஷப்படுகிறார்கள். முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது ஒரு அனுபவம். ஆனால், அதே படத்தில் நாமும் இடம்பெற்றிருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் “ என்று மிக நெகிழ்ச்சியாக தெரிவித்தார். அத்தோடு ரசிகர்களுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தையும் ஒரு சிறிய வீடியோ துணுக்கு ஒன்றையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.