கள்ளக்காதல் பஞ்சாயத்துகளில் சிக்கி சினிமா தலைப்புச் செய்திகளில் சில நாட்களாக இடம்பெற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் அதிதி மேனன், அபி சரவணன் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை விழா மேடையில் வெளியிட்டு ஷாக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஒருவர்.

உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதனின் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவது ரிலீஸ் செய்கிறது.

நேற்று பிரசாத் லேப்பில் நடந்த இப்பட ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தமிழில் படங்களுக்கு தலைப்பு வைக்கவேண்டிய அவசியம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசிய காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது.

50 தயாரிப்பாளர்களையும் மேடையேற்ற முடியாது என்பதால் 5 பேர் மட்டும் மேடையில் அமரவைக்கப்பட்டனர். அவர்கள் சார்பில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர் கள்ளம் கபடமில்லாமல் படம் குறித்த பல ரகஸியங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக துவக்கத்தில் படத்தில் ஒரு வாரம் நடித்துவிட்டு நடிகர் அபிசரவணனுடன் ஓடிப்போன அதிதி மேனன் குறித்த பஞ்சாயத்துகளை மேடையிலேயே போட்டு உடைத்தார்.

 ’படம் ஆரம்பித்த ஐந்தே நாட்களில் ஹீரோ வேறு படத்துக்கு ஓடிவிட்டார். அடுத்த ஷெட்யூலில் நடிகை அதிதி மேனன் நடிகர் அபி சரவணனுடன் ஓடிவிட்டார். அவரை எப்படியாவது திரும்ப நடிக்க அழைப்பதற்காக தொடர்பு கொண்டபோது ஒவ்வொருமுறையும் அதிதி போனை அபி சரவணன் தான் எடுத்தார். ‘உங்க டைரக்டர் அதிதியை ரேப் பண்ணிருவேன்னு மிரட்டுறாரு’ என்று அபாண்டமாகப் பொய் சொல்லி படத்திலிருந்து எஸ்கேப் ஆனார்கள் என்று அவர்கள் குட்டை மேடையிலேயே உடைத்தார்.

‘படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும் நண்பர் செல்வக்கண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்’ என்றார்.