ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவைக் கமிட் பண்ணும்படி  ரஜினியே சொன்னதாக ஒரு செய்தி நடமாடி வருகிறது. இச்செய்தியை முருகதாஸ் வட்டாரங்கள் மறுக்கவில்லை.

‘பேட்ட’ படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. செளந்தர்யாவுக்கு கடந்த 11-ம் தேதி திருமணம் முடிவுற்றது. இதையடுத்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத்துவங்கியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் அனிருத்தே இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

மார்ச்சில் அநேகமாகப் படப்பிடிப்பு துவக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றிய செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் ரஜினி நயன் பெயரை சிபாரிசு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.  ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்கு அஜீத்தை விட நயன் தான் முக்கிய காரணம் என்று ரஜினி நம்புவதாலேயே இந்த சிபாரிசாம். ஏற்கெனவே ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, ‘சிவாஜி’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். மேலும், ‘குசேலன்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.