முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா உடல்நலிவு காரணமாகச் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016 ஆம்  ஆண்டு  உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றைத்  திரைப்படமாக வெளியாக இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியலில் மட்டுமின்றி திரைத் துறையிலும் கோலோச்சியவர் . அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், ஜெயலலிதாவின் பயோபிக் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் நயன்தாராவே ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நயன்தாராவோ, 'நான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பேனா என்று தெரியவில்லை.ஆனால்  எல்லா நடிகர்களுக்கும் ஒரு சில வேடங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். எனக்கு ஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசை' என்று கூறியுள்ளார். மேலும் இளமையான தோற்றத்தில் நயன்தாராவும், வயது முதிர்ந்த தோற்றத்தில் ரம்யாகிரிஷ்ணனும் நடிக்கவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வரத்தொடங்கியுள்ளது ஆனால் இன்னும் உறுதியான தகவல் தயாரிப்பு தரப்பிலிருந்து வரவில்லை.

இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்குகிறார். அவர் இதற்கு முன்பு கிரீடம், தெய்வத் திருமகள், தலைவா, வனமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை விபிரி மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது அந்த நிறுவனம் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. படத்தின் முதல் பாதி ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கை குறித்தும், இரண்டாம் பாதி அவரது அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்தாண்டு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.