மூன்று நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கும் ‘இன்று போய் நாளைவா’ டைப் கதையான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ ஒரு வழியாய் தியேட்டர்களை நெருங்கிக்கொடிருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி இந்த வாரம் ரிலீஸாகும் வாய்ப்பு இருக்கிறதா என்பது மீண்டும் சந்தேகத்திற்கிடமாகியிருக்கிறது.

 

போஸ்டர்கள் அடித்து, செய்தித்தாள்களில் விளம்பரம் தந்து கடைசிநேரத்தில்  குறைவான எண்ணிக்கையிலாவது தியேட்டர்கள் கிடைக்காமல் பின்வாங்க வேண்டிய துயரமான நிலை சிறுபட்ஜெட் படங்களுக்கு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. 

இந்த லிஸ்டின் லேட்டஸ்ட் பலிகடா லிப்ரா புரடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ சிவகுமார் அர்விந்த் இயக்கத்தில் புதுமுகம் கவின், கேரள தேவதை ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு, கடந்த ஆண்டே ஆடியோ ரிலீஸ் பண்ணப்பட்ட படமாகும்.

 

இப்படத்துடன் நாளை ரிலீஸாவதாக இருக்கும் ‘ஆண் தேவதை’’மனுஷங்கடா’ ஆகிய படங்களும் தேவையான தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடிவருகின்றன. ரிலீஸ் குறித்து முகநூலில் கண்ணீர் வடித்துவரும் இப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் ‘சென்னையில் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஒரு காட்சி தருவதற்கே என்னைப்பாடாய்ப் படுத்துகிறார்கள். அதுவும் கூட்டமே வராத காலைக்காட்சிதான் தருகிறார்கள். இந்தவாரமும் படம் ரிலீஸாவது சந்தேகமே’ என்று பதிவிட்டிருக்கிறார்.