மறைந்தாலும் மறக்க முடியாத நடிகர் நாகேஷ் பற்றி சுவடுகள்....!!!
தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை ரசிகர்கள் மனதில் பதித்து சென்றவர்களில் நடிகர் நாகேஷும் ஒருவர். கதாநாயகன், நகைசுவை நடிகர், வில்லன், குணச்சித்திர வேடம், நடனம் என பலவற்றிலும் சிறந்து விளங்கியவர் நாகேஷ்.
தன்னுடைய ஒட்டுமொத்த திறமையை வெளிப்படுத்தி தமிழ் திரையுலகில் அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டு இதே தினத்தில் ரசிகர்கள் அனைவரையும் விட்டு இந்த மன்னுகளை விட்டு விண்ணுலகம் சென்றார்.
நாகேஷுக்கு முந்தைய நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு போன்றோர் கருத்துக்களுடன் நகைச்சுவை கூறி வந்த நிலையில் முதல்முதலாக பாடிலேங்வேஜ் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்தவர் நாகேஷ்.
இவர் நடித்த 'திருவிளையாடல்' தருமி, 'தில்லானா மோகனாம்பாள்' வாத்தி, 'காதலிக்க நேரமில்லை' செல்லப்பா, போன்ற பல கேரக்டர்களை பல தலைமுறைகள் ஞாபகம் வைத்திருக்கும் படங்களாக அமைந்தது.
மேலும் முன்னணி கதாநாயகர்களாக எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், ஆகிய மூன்று தலைமுறை நடிகர்களுடன் 1000 படங்களுக்கும் மேல் நடித்து அசத்தியுள்ளார் .
கமல் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வில்லன், 'அவ்வை சண்முகி' படத்தில் மேக்கப் மேன், போன்ற வேடங்களிலும் ரஜினியுடன் அவர் நடித்த 'தில்லுமுல்லு', அதிசயபிறவி, படிக்காதவன், தளபதி, ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
விஜய்யுடன் நாகேஷ் நடித்த 'பூவே உனக்காக' படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பு அந்த படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. அஜித்துடன் அவர் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தில் அஜித்தின் தாத்தாவாகவும் சிவகுமாரின் தந்தையாகவும் அருமையாக நடித்திருப்பார்.
நாகேஷின் நடிப்பை முழுக்க முழுக்க வெளிப்படுத்த காரணமாக இருந்தவர் அவருடைய நண்பரும், இயக்குனர் சிகரமுமான கே.பாலசந்தர்தான் என்று கூறினால் அது மிகையாகாது. 'எதிர்நீச்சல், நீர்க்குமிழி, பாமாவிஜயம், இரு கோடுகள், தாமரை நெஞ்சம், போன்ற பல படங்கள் காலத்தால் அழியாதது.
நடிப்பு, நடனத்தை அடுத்து நாகேஷ் ஒரு படத்தை இயக்கவும் செய்தார். இவரது மகன் ஆனந்த்பாபு முக்கிய வேடத்தில் நடித்த 'பார்த்த ஞாபகம் இல்லையோ' படம் நாகேஷ் டைரக்ட் செய்த ஒரே படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷ் மீது கமல், ரஜினி இருவருமே மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அதனால்தானோ என்னவோ நாகேஷின் கடைசி படமாக கமலின் 'தசாவதாரம்' அமைந்தது. நாகேஷின் மீது அளவில்லா பாசம் வைத்திருந்த ரஜினி, அவருடைய இறப்பிற்கு பின் அவரை 'கோச்சடையான்' படத்தில் உயிர்த்தெழ வைத்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இதே நாளில் நாகேஷ் நம்மை விட்டு மறைந்தார், இவர் நம்மை விட்டு மறந்தாலும் இவருடைய நினைவுகள் அடுத்த எப்போதும் நீங்காது என்பது குறிப்பிடத்தக்கது.