சண்டைக் காட்சியில், ஸ்டண்ட் இயக்குநர் எவ்வளவோ எச்சரித்தும் கேளாமல் ரிஸ்க் எடுத்த பிரபல நடிகருக்கு கால் மூட்டு உடைந்தது. அப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சவுரியா.  தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய, தியா என்ற படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் இவர்  நடித்திருந்தார். ’தியா’வில் நடித்தபோது அதன் நாயகி சாய் பல்லவிக்கும் இவருக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு அப்போது அச்செய்திகள் வலைதளங்களில் வைரலாகின. இவர் தற்போது அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரமண தேஜா இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மெஹ்ரின்  நடித்து வருகிறார்.

இந்த நிலையில் படத்தின் சண்டைக் காட்சி ஆந்திராவின் ஊட்டி என்று கூறப்படும் அரக்கு வேலியில் நடந்து வந்தது. கொஞ்சம் ரிஸ்கான அந்தக் காட்சியில் அவருக்கு டூப் போட்டு நடிக்க வைக்க ஸ்டண்ட் இயக்குநர் விரும்பினார். அதை தவிர்க்க விரும்பிய நாக சவுரியா டூப் போடாமல் நடிக்க முயலவே எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் நாக சவுரியாவின் முட்டி உடைந்தது.

அதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுப் படக்குழு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது