தமிழக விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை பிச்சை எடுத்து போராட்டம் , கோமணம் கட்டி போராட்டம், அரை நிர்வாண போராட்டம், தூக்கு மாட்டி போராட்டம் என பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தியும் மத்திய அரசு இன்னும் இவர்கள் பிரச்சனைக்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடும் முக்கிய நபர்களான நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ், பாண்டி ராஜன் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்தனர்.

இவர்களை கண்டதும் பிரகாஷ் ராஜ், அவர்களின் நிலையை நினைத்து கதறி அந்த இடத்திலேயே அழுதார். மேலும் இது குறித்து பேசிய அவர் இத்தனை நாட்கள், போராட்டம் நடத்தியும் ஏன் மத்திய அரசு இவர்களில் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என ஆதங்கமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் இவர்களில் 10 பேர் 20பேர் பாதிக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக நடிகர் சங்கம் மூலமாக உதவிகள் செய்திருப்போம் , ஆனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களின் குறையை தீர்க்க மத்திய அரசால் மட்டும் தான் முடியும் என்று கூறினார்.

இன்று விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுத்திருக்கும் பிரகாஷ் ராஜ், விவசாயம் மேல் உள்ள காதலால் தானே ஒரு பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருவது குறிப்பிடதக்கது.