கேரளாவில் 50 ஆண்டு கால வரலாற்றில் காண முடியாத அளவுக்கு மழை பெய்து வருவதால் அம் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். மீட்பு பணிகளை மாநில அரசும் துரிதமாக முடுக்கி விட்டுள்ளது.

தொடர் மழை பெய்து வருவதால்,  எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இடுக்கி, கோட்டையம், வயநாடு உள்பட 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் சேதமடைந்து உள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலா மற்றும் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். வரலாறு காணாத அளவுக்கு வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க படகுகள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.

இதனால் தமிழகம், புதுவை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் கேரள மக்கள் மருத்துவ உதவி மற்றும் பல்வேறு தேவைகளுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.  ஏற்கனவே நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ரூ.25 லட்சம் நிதி உதவியும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். 

இந்நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.