தேவைக்கும் அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டு, 10 போலீஸார் காவலுக்கு நின்றால் போதும் என்கிற நிலையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டு பரபரப்பாக நடப்பதற்குப் பதில் படபடப்பாக நடந்து முடிந்திருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல்.

வழக்கம்போல் தல அஜீத் இந்த முறையும் வாக்களிக்க வராத நிலையில், இம்முறை முதல் புதிதாக வகைப்புயல் வடிவேலுவும் வரவில்லலை. இந்த இருவரோடு, ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ராதிகா, ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, சிம்ரன், ஓவியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஓட்டுப்போடவில்லை. இவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா ந்பது குறித்து எந்த அற்விப்பும் இல்லை. ஏனெனில் அதையும் விட புனிதமான பஞ்சாயத்துக்கள் அவர்கள் முன்னே குவிந்துகிடக்கின்றன.
 
நடிகர் சங்க தேர்தலை நடத்த விடக்கூடாது என்றும், ஓட்டுப்போட வருபவர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்றும் ஒருவர் பேசிய ஆடியோ நேற்று அதிகாலையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் தேர்தலில் வன்முறை ஏற்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்த புனித எப்பாஸ் பள்ளியை சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால்  உண்மையில் 10 போலீஸார் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

ஜூலை 8ம் தேதி நிலுவையில் இருக்கும் நடிகர் சங்க வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போதுதான் வாக்கு எண்ணிக்கை எப்போது என்பதே தெரியவரும் என்கிற நிலையில், நேற்றைய நிலவரப்படி விஷால் அணியே மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். நடிகர் சங்கக் கட்டிடத்தை தனி ஒரு நபராக நானே கட்டி முடிக்கிறேன்’ என்று ஐசரி கணேஷ் பெருமை அடித்ததை சங்க உறுப்பினர்கள் பலரும் அவமானமாகக் கருத்துவதாகவும், நட்சத்திரக் கலைவிழா நடத்தி அனைவர் உழைப்பிலும் அக்கட்டிடம் உருவாக வேண்டும் என்றும் பெரும்பாலானோர் விரும்புவதாகம் தெரிகிறது.