கடந்த முறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சேர்ந்தவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து,  2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய, வரும் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  வருகிற 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுறத்தில் உள்ள, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட உள்ளனர். 

அதே போல் துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தினேஷ், சோனியா போஸ், குட்டிபத்மினி, கோவை சரளா ,  பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு,  காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமசந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, சரவணன், ஆதி, வாசுதேவன்,  காந்தி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

மேலும் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் நாள் அன்று, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.