எதிர்மனுதாரர்களின் தரப்பையும் விசாரிக்கவேண்டி உள்ளதால் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வாக்குகளை எண்ண இப்போதைக்கு அனுமதி இல்லை’ என்று சென்னை உயர்நீதிமன்றம் விஷாலுக்கு எதிராக வழங்கியது.

பலத்த சர்ச்சைகளுக்கிடையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தப்பட்டது. தேர்தலை மட்டும் நடத்த அனுமதித்த நீதிமன்றம்  பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன்பு நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தபால் வாக்குகள் வராததால், சென்னைக்கு வந்து வாக்களிக்க முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் மூவரும் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் ஜூலை 8-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.அதேசமயம், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கும் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எதிர்மனுதாரர்களின் வாதத்தையும் கேட்க வேண்டியுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை உடனே நடத்தவேண்டும் என்ற விஷால் தரப்பின்  கோரிக்கையை நிராகரித்தனர். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் வெள்ளிக் கிழமை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.