நடிகர் சங்கத்தேர்தலில் தனது அணிக்கு எதிராகப்போட்டியிடும் ஐசரி கணேசை விஷால் சந்தித்ததாகவும் அப்போது அவர் விஷாலுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் வந்த தகவல்களை அடுத்து, அச்சந்திப்பு குறித்த இரு முரண்பாடான தகவல்கள் நடமாடுகின்றன.

வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த விஷாலிடம் ‘உங்களுக்கு எதிராகப் போட்டியிடும் ஐசரி கணேஷைச் சந்திப்பில் நடந்தது என்ன?’ என்ற கேள்விக்கு, “ஐசரி கணேஷைச் சந்தித்து, நான் என்ன காரணத்துக்காகத் தேர்தலில் நிற்கிறேன் என்று சொன்னேன். அவர் என்ன காரணத்துக்காக நிற்கிறார் என்றும் கேட்டேன். இரண்டு காரணங்களும் வெவ்வேறாக இருந்தன. அந்த சமயத்தில், ‘சார் இது தேர்தல். இதற்கு மேல் நாம் பேசக்கூடாது. நாம் எல்லோரும் குடும்ப நண்பர்கள். ஆனால், தேர்தல் என்று வரும்போது போட்டி இருக்கத்தான் செய்யும்.

என்னைப் பொறுத்தவரை, என்னைச் சார்ந்த பொதுச்சொத்தைக் காப்பாற்றுவதற்கு, என்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன். அவர் தேர்தலில் நிற்பதற்கான காரணத்தை நான் சொல்லக்கூடாது. இது தேர்தல் நேரம். இரண்டு ஓட்டுகள் கூடுதலாக வாங்குவதற்காக அவரை கொச்சைப்படுத்தக் கூடாது.தேர்தலை முன்னிட்டு முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் ஆசி பெறுவதற்காக சந்திக்க நேரம் கேட்கப் போகிறோம். கூடிய விரைவில் கட்டிடம் தயாராகப் போகிறது. அதன் திறப்பு விழா உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சொல்லிவிடுவோம். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது, பொதுச்சொத்தைக் காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சி. இதில் நான் பின்வாங்க மாட்டேன்” எனத் தெரிவித்தார் விஷால்.

ஆனால் ஐசரி கணேஷ் தரப்போ விஷால் ஐசரியை சந்திக்கவேயில்லை. சும்மா வழக்கம்போல் ரீல் விடுகிறார் என்கிறார்கள். இது குறித்து தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள ஐசரி கணேஷ் அணியின் ஆதரவாளரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி,...ஐசரி கணேஷ் அண்ணன் அவரை மீட் பண்ணவேயில்லை. ஆனால் மீட் பண்ணுணாறாம் மிரட்டினாராம்.. ஆளுங்கட்சி சாதகம்னு எல்லாம் செய்தி வருது. கடந்த தேர்தலில் எலெக்சன் அன்னிக்கு நடந்த ட்ராமா இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் என்னென்ன ட்ராமா போட காத்திருக்காரோ தெரியலை. நடுரோட்ல புரண்டுகூட அழுவாப்ல...எதிரணியினர் சூதானமா..பார்த்து... உஷாரா.. அடிச்சி ஆடும்படி கேட்டுக்கொள்கிறேன்’...என்று படு கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.