பார்த்திபன் இயக்கிய "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சந்தோஷ் பிரதாப். தற்போது இவர் சினிமா பிளாட்பார்ம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சாந்தினி ஹீரோயினாக நடித்துள்ளார். "ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி" படத்தை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்த படத்தை இயக்குகிறார். நான் அவளை சந்தித்த போது என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த படம் வரும் 27ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படக்குழுவினருக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது அப்படத்திற்கான பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சியின் சீரியலுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா என்றல்ல, அனைத்து மொழி சினிமாவிலும் கதை திருட்டு என்பது அடிக்கடி நடக்கும் விவகாரம். வழக்கமாக கதையை திருடுவாங்க, இல்லையேல் சீனை திருடுவாங்க ஆனால் இப்படி மியூசிக்கை எல்லாம் திருடுவாங்களா என அதிர்ச்சியில் உள்ளனர். 

ஒரே மியூசிக் தியேட்டரில் மியூசிக் ரெக்கார்டிங் நடந்து வந்த போது, இந்த திருட்டு சம்பவம் நடத்திருக்கலாம் என படக்குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  சிறிய பட்ஜெட் படமான "நான் அவளை சந்தித்த போது" படக்குழுவிற்கு ஏற்பட்ட இந்த சிக்கல் திரைத்துறையில் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளது.