நடிகர்கள் விஜய்சேதுபதி,பசுபதி, ’ஜோக்கர்’ குருசோமசுந்தரம், விமல், விதார்த், கலைராணி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களை தனது ‘கூத்துப்பட்டறை’ நடிப்புப் பயிற்சி அமைப்பின் மூலம் தமிழ்த்திரயுலகுக்குத் தந்த  ந.முத்துசாமி சற்றுமுன் உடல்நலக்குறைவால் காலமானார்.  தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த அவருக்கு வயது 83. 

 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது  பெற்றிருக்கிறார். நீர்மை உட்பட ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ‘ந.முத்துசாமி கட்டுரைகள்’ என்னும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) என்னும் பிரிவில் பரிசு பெற்றிருக்கிறது. 2012ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையைப் பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், உந்திச்சுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன், இங்கிலாந்து தெனாலி, பிரகலாத சரிதம், சந்திரஹரி, படுகளம் என்று முத்துசாமியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தளத்தில் இயங்குகின்றன.

முத்துசாமி நவீன நாடகப்பிரதிகளை எழுதியதோடு, அதை முழுமையானதொரு நவீன நாடகமாக நடிகர்களைக்கொண்டு பயிற்சி செய்து உருமாற்றிக் காட்டுகிறார். குறிப்பாக மேடையின் ஒளியமைப்பில் கூத்துப்பட்டறை செய்த பல முன் முயற்சிகள் இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.