முகநூலில் நட்பாக இருந்த இளம்பெண் ஒருவருக்கு தனது நிர்வாணப்படங்களைத் தொடர்ந்து அனுப்பி படுக்கைக்கும் அழைத்த இசையமைப்பாளர் ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர். 

பெங்களூருவில் உள்ள கே.எஸ். லேஅவுட்டில் வசிப்பவர் முரளிதர் ராவ். தனது முகநூல் பக்கத்தில் கன்னட திரையுலக நட்சத்திரங்கள் பலருடன் எடுத்துக்கொண்ட படத்தைத் தொடர்ந்து பகிர்ந்து வந்திருக்கிறார். தனக்கு கன்னட திரையுலகில் உள்ள நடிகர்கள், இயக்குநர்கள் மிகவும் நெருக்கம் இருப்பதாகவும் தன்னால் பட வாய்ப்புகள் வாங்கித்தரமுடியும் என்றும் முகநூல் மூலமாக தொடர்ந்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

அவரது பதிவுகளை நம்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நடிப்பு ஆசையிருக்கிறது.படங்களில் வாய்ப்பு வாங்கித்தரமுடியுமா எனக் கேட்கவுமே முரளியின் சுயரூபம் மெல்ல வெளிப்படத்துவங்கியது. கன்னடத் திரையுலகில் தான் மிகவும் செல்வாக்கு மிக்க ஆள் என்று அந்தப் பெண்ணிடம் காட்டிக்கொள்ள ஆரம்பித்த அவர் அப்பெண்ணுக்கு ஆபாச மெஸேஜ்களையும் செக்ஸ் துணுக்குகளையும் ஃபார்வேர்ட் செய்யத் தொடங்கினார்.

அத்துடன் நில்லாமல் தனது இல்லத்துக்கு ஒரு ஃபோட்டோ ஷூட்டுக்காக வரவேண்டியிருக்கும் என்றும் அது மட்டுமின்றி தன்னோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டால்தான் பெரிய வாய்ப்புகள் வாங்கித்தர முடியும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறார். அதற்கு அப்பெண் மவுனம் சாதிக்கவே தொடர்ந்து தனது முழு நிர்வாணப் படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு தரத் துவங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது இம்சைகள் அதிகமாகவே அந்த இளம்பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அத்தனை ஆதாரங்கலையும் ஒப்படைத்து புகார் செய்தார். உடனே அந்த காமுக இசையமைப்பாளரை கைது செய்த போலீஸார் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரால் வேறு சில பெண்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.