நேற்றைய தினம், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், கோவை தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் சென்னை லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர், என பல அரசியல் தலைவர்களும்,  திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீத்தா  அம்பானி ஆகியோர்,  கலந்து கொண்டனர். அவர்களுக்கு ரஜினி மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் மும்பையில் நடந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் சென்று கலந்து கொண்டார்.  அந்த வகையில் நேற்று நடைபெற்ற ரஜினி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். 

மேலும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.