தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில், பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எம்.எஸ்.பாஸ்கர். இவரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 

திரையுலகில், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். பின் 'திருமதி ஒரு வெகுமதி' என்கிற படத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பின் சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவருடைய நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'அழகி', 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'கங்கை யமுனா சரஸ்வதி', 'செல்வி' போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம், ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது என்றே கூறலாம்.

இவருக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும், ஆதித்யா  என்கிற மகனும் உள்ளனர். மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல படங்களில் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அதே போல் இவருடைய மகன் ஆதித்யா கடந்த வருடம் வெளியான '96 ' படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா பாஸ்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் நடந்து இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில், எம்.எஸ்.பாஸ்கரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். விரைவில் ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.