பிரபல நடிகர்கள் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என பல கட்சிகள் அவர்களின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.  இதற்கு முக்கிய காரணம் தனக்கு பிடித்த நடிகர்,  எந்த கட்சிக்கு தன்னுடைய ஆதரவை கொடுக்கிறாரோ ரசிகர்களும் அந்த கட்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள் இதன் மூலம் அப்படியான வாக்குகள் மற்றும் ஆதரவு கிடைக்கும் என்கிற எண்ணம்தான்.

அந்த வகையில் சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக கட்சியில் சேர்ந்தனர்.  இதனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அஜித் ரசிகர்கள் இணைந்து தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்று அஜித் ரசிகர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.

இவர் இப்படி கூறிய மறு தினமே, நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும், தன்னுடைய ரசிகர்களையும் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுங்கள் என தான் கட்டாய படுத்தியது இல்லை. தனக்கும் அரசியலுக்கும் உள்ள ஒரே சம்பந்தம் ஓட்டு போடுவது மட்டுமே என கூறினார்.

இதை தொடர்ந்து, மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலும் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும்,  திருவனந்தபுரம் உள்ளிட்ட எந்த தொகுதி வேண்டுமானாலும் அவருக்கு சீட் கொடுக்க  தயார் என்றும் பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் உலா வந்தன.

இதற்க்கு அஜித் பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார் மோகன்லால். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாஜக உள்பட எந்த ஒரு அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அதுமட்டுமின்றி அரசியலில் ஈடுபடும் எண்ணமே தனக்கு இல்லை என்றும் நடிகர் மோகன்லால் கூறியுள்ளார். இதற்க்கு பலர் இவருக்கு தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.