சீமான், பிரியங்கா நடிப்பில் நாளை வெளியாவதாக இருந்த ‘மிக மிக அவசரம்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி 18ம் தேதியாக அறிவித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. போதிய தியேட்டர்கள் கிடைக்காததே இந்த தள்ளிவைப்புக்குக் காரணம் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பெண் காவலர்களுக்கு மூத்த பதவியில் உள்ள அதிகாரிகளால் நடக்கும் அட்டூழியங்களை கதைகளமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே இயக்கியுள்ளார். படத்தின் மையப்பாத்திரத்தில் பிரியங்கா நடிக்க நாம் தமிழர் சீமான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். நாளை வெள்ளியன்று ரிலீஸாவதாக தடபுடல் விளம்பரம் செய்யப்பட்ட இப்படம் தனுஷின் அசுரன் படம்  நான்ஸ்டாப் அசுர வசூல் புரிவதாலும் கூடவே நாளை மேலும் 3 படங்கள் ரிலீஸாவதாலும் ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் சற்றுமுன்னர் பதிவிட்ட இயக்குநர் சுரேஷ் காமாட்சி,...இந்த 11ஆம் தேதி வெளியாக இருந்த #மிகமிகஅவசரம் படம் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் வெளியீடு அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது. அக்டோபர் 18 இல் வெளியாகும். பெரும் பாராட்டில் குளிர்வித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவை தொடர்ந்து தரக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி,... என்று பதிவிட்டுள்ளார்.