நடிகர் ரஜினிகாந்திற்கும் லதாவிற்கும் காதல் இருந்ததாகவும், அதை பிடிக்காத எம்.ஜி.ஆர். ரஜினியை ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்து அடித்ததாகவும் சோசியல் மீடியாக்களில் பரவி வந்த வதந்திக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க்காப்பாளராக நிழல் போல் உடன் இருந்தவர் கே..பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பதிலாக டூப் போடுவதும் இவர் தான். 

1979ம் ஆண்டு ரஜினிகாந்தை அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாக சோசியல் மீடியாவில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ரஜினியை ஒருபோதும் எம்.ஜி.ஆர். அடிக்கவில்லை எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கே.பி.ராமகிருஷ்ணன்.

அதில் ராமாவரம் வீட்டிற்கு எம்.ஜி.ஆரை பார்க்க ரஜினி வந்ததாகவும், ரஜினியுடன் நீண்ட நேரம் பேசிய எம்.ஜி.ஆர். சினிமாவில் முன்னேறுவது எப்படி, கல்யாணம், உடல் நலம் ஆகியவை குறித்து பேசியதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து வருவார் என்றும் அன்றே தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். கூறியிருந்தார் என்று நினைவுகூர்ந்துள்ளார். 

அதே நேரத்தில் கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை எம்.ஜி.ஆர் அடித்த நிகழ்வையும் கே.பி. ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார்.  ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாள் முதல், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விதமான கருத்து தாக்குதல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.