பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கவிஞர் வைரமுத்துவை ஏன் சிலை திறப்பு விழாவுக்கு அழைத்து அவரை முதல் வரிசையில் அமர வைக்க வேண்டும் என மக்கள் நீதி மையத்தின் தலைவரும்  நடிகருமான கமலஹாசனிடம் பாடகி சின்மயி மறைமுகமாக கேள்வி எழுப்பி உள்ளார்.  சர்வதேச அளவில்  பிரபலமான மீடு  இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்து  வெளிப்படையாக சமூகவலைதளத்தில் பேசத்தொடங்கினார்.  இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகளும் பதிவியை  இழக்கும் அளவிற்கு பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தியது .  கவிஞர் வைரமுத்துவும் இக் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தினார் என பாடகி சின்மயி வைரமுத்து மீது புகார் கூறி,  தமிழ் திரையுலகையே அதிர வைத்தார். அப்போது சின்மயிக்கு  ஆதரவு மற்றும் எதிர்ப்பு  குரல்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து  சின்மயி பெண்களுக்கு எதிரான  குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.  இந்நிலையில் நடிகர் கமலஹாசன் தனது அலுவலகத்தில் இயக்குனர்  பாலச்சந்திரனின் சிலையை திறந்துள்ளார்.  இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  இயக்குனர் மணிரத்தினம்,  கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  சின்மயி,  பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டவரை எதற்காக இந்த விழாவிற்கு அழைக்க வேண்டும்.? என  மறைமுகமாக கமலை சாடியுள்ளார்.  இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள அவர்,  நான் இங்கு குறிப்பிடுவது வைரமுத்துவை... "ஒரு மனிதன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவனது வாழ்க்கையே அழிந்துவிடும், 

அத்துடன் தன் முகத்தை வெளியில் காட்டக்கூட அவன் அஞ்சுவான் . அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்து,  தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல பொது நிகழ்ச்சிகளில்,  குறிப்பாக திமுக நிகழ்ச்சிகள்,  மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி நிகழ்வுகள். மற்றும் தமிழ்மொழி நிகழ்வுகள்,  தொழில் நிகழ்வுகள்,  உள்ளிட்டவைகளில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்பட்டு வருகிறார்.  ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணான நான் இப்போது தடை செய்யப்பட்டிருக்கிறேன்.  இதுதான் தமிழ்ச் சினிமாவில் உள்ள பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி,  என அவர் தன் ஆதங்கத்தை  பதிவிட்டுள்ளார்.  பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  இவர்களில் அரசியல்வாதிகளும் அடக்கம்.   இப்படிப்பட்டவர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது என சின்மயி பதிவிட்டுள்ளார்.