தன்னைச்சுற்றி எப்போதும் எதாவது சில சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புகிற எழுத்தாளர் ஜெயமோகன் லீனா மணிமேகலை விவகாரத்தில் இயக்குநர் சுசி கணேசனை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகிறார். சுசியின் மீதான குற்றச்சாட்டை லீனா என்னிடம் முன்னரே சொல்லியிருக்கிறார் என்று ஆணித்தரமாக அடித்து ஆடுகிறார் ஆசான். 

லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வாசித்தபோது அதில் நான் முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று உண்டு என்று பட்டது. லீனா குறிப்பிட்டிருக்கும் இந்நிகழ்ச்சியை அவர் என்னிடம் முன்னரே சொல்லியிருக்கிறார். இணையத்திலும் பதிவுசெய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் இதை முன்னரே சொன்னது இத்தருணத்தில் முக்கியமான ஒரு தகவல் என்பதனால் அதை நான் குறிப்பிடவேண்டியிருக்கிறது. 

மும்பையில் சென்ற மார்ச் 3 ,2016 அன்று கேட்வே லிட் ஃபெஸ்ட் என்னும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். லீனாவும் அந்த நிகழ்சியின் பங்கெடுப்பாளர்களில் ஒருவர். நண்பர் மதுபால் உட்பட பலர் கலந்துகொண்டனர். அன்று வெளியே பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பரின் மகள் இதழியலில் ஈடுபட விருப்பம் கொண்டிருப்பதைப்பற்றிச் சொன்னேன். லீனா இதழியலில் உள்ள சவால்களைச் சொல்ல ஆரம்பித்து இந்நிகழ்ச்சியை விவரித்தார். முதலில் சாதாரணமாக சிரித்தபடிச் சொல்ல தொடங்கி மெல்ல உணர்ச்சிவசப்பட்டு முகம் சிவந்து சீற்றம் கொண்டார். 

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.லீனாவின் அந்த முகம் நான் அறியாதது. அந்நிகழ்ச்சி கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றன, ஆகவே அதை அவர் கடந்துவந்துவிடலாம் என்று மட்டும் சொன்னேன். அதை தானும் கடந்துவந்துவிட்டதாகவும் அது பெரிய விஷயம் அல்ல என்றும் அவர் சொன்னார். ஆனால் மீண்டும் அவர் அதை இணையத்தில் எழுதினார் என அறிந்தேன். அவரால் அதைக் கடந்து செல்ல முடியவில்லை என்று புரிந்தது. 

 லீனா இப்போது இதைச் சொல்வது அவருக்கு எவ்வகையிலும் உதவாது, மேலும் உளப்பாதிப்பையே அளிக்கும்  என்பது என் எண்ணம்.  அவர்அதை கடந்துசெல்வதே ஒரே வழி என்றே எனக்குப் படுகிறது. ஆயினும் இத்தருணத்தில் அவருடன் நிற்கிறேன்’’ என்கிறார் ஜெயமோகன்.