சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்படி பார்வதிக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

ஜெய்பீம் படம் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் ராஜ்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளைச் சந்தித்து நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் வழங்கியிருக்கிறார்.

சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் ஞானவேல் இயக்கத்திலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படம் வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் ராஜ்கண்ணுவிடம் கொடூரமாக நடந்து, கொலை செய்த அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி கலச காலாண்டர் இடம்பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து அந்த காலண்டர் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அக்னி கலச காலாண்டருக்குப் பதில் மகாலட்சுமி காலாண்டர் மாற்றப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏசு நாதர் காலாண்டரை மாட்டாமல் மகாலட்சுமி காலாண்டரை மாற்றியது பற்றி தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டித்திருந்தார். இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தின் உண்மையான ராஜ்கண்ணுவின் மனைவியான பார்வதி, “என் வாழ்க்கை கதையை வைத்து கோடி கோடியா சம்பாதிக்கிறார்கள். எனக்கு சூர்யா ஒரு உதவியும் செய்யவில்லை” என்ற காணொலி சமூக ஊடங்களில் வைரலானது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்படி பார்வதிக்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்வதாக சூர்யா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

ஜெய்பீம் சர்ச்சை நீடிக்கும் நிலையில் ராஜ்கண்ணு மனைவி பார்வதி - நடிகர் சூர்யா சந்திப்பு நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது. தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சூர்யா சந்தித்தார். இச்சந்திப்பின்போது நடிகர் சூர்யா சார்பில் ரூ. 15 லட்சம் ரூபாய்க்கான வங்கி காசோலை ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு வழங்கப்பட்டது. கே.பாலகிருஷ்ணன் இதை வழங்கினார். ரூ.10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவிந்திருந்ததற்கு மாறாக, ரூ.15 லட்சம் ரூபாயை தற்போது சூர்யா வழங்கியிருக்கிறார்.