ஒரு கல்லூரி மாணவிக்கு நேரும் பாலியல் தொல்லைகளை சம்பவங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘மி டு’ படத்திற்கு ஏற்கனவே சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்துள்ள நிலையில் தற்போது ரீ சென்சாரிலும் அப்படம் வெளிவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தாங்கள் பணிபுரியும் துறைகளில், அலுவலகங்களில், இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியில் கொண்டு வர தொடங்கப்பட்ட இயக்கம் மீடூ. சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கம் இந்தியாவுக்கும் கடந்த ஆண்டு வந்தது. சினிமா பிரபலங்கள் மீது நடிகைகள், பாடகிகள், உதவி இயக்குனர்கள் என புகார்கள் பெருகின.

பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கினார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹர்‌ஷவர்தன் ’மீ டூ’ என்ற திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.

‘இறுதிசுற்று’ படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 7 மாதங்களுக்கு முன்பே உருவான போதும் படத்தில் இடம் பெற்ற சில வசனங்கள் காரணமாக படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்தது.

அதன் பின் நடிகை கவுதமி தலைமையிலான மறு சீராய்வுக்குழுவுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த முறை படத்தின் ’மி டு’ என்ற தலைப்பு தொடங்கி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருப்பதாகக்கூறி  சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சஜித் குரேஷி கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.