‘நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா ஒண்ணுரெண்டு பொய் சொல்றது தப்பில்ல. அந்த வகையில அஜீத் சார் பேரைச்சொல்லி பசங்க கொஞ்சம் பேரை நான் ஏமாத்தியிருக்கேன்’ என்று ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’பட புரமோஷன் விழாவில் போட்டுடைத்தார் நகைச்சுவை நடிகர் மயில்சாமி.

வழக்கம்போல் மேடையில் சிரிப்பாகவும் சிறப்பாகவும் பேசிய மயில்சாமி ''ஆர்.ஜே.பாலாஜி என்னைக் கூப்பிட்டார். படத்துல நடிக்கணும்னு சொன்னார். உடனே நான் அவரைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு வாழ்த்தினேன். ஒரு நல்ல மனிதரோட சேர்ந்து நடிக்கறது, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

இந்தப் படத்தோட தயாரிப்பாளர் எனக்கு 30 வருடப் பழக்கம். அற்புதமான மனிதர். பாலாஜி ஹீரோவா பண்றார். நல்லா வந்திருக்கு. மழை பெய்து மிக பாதிப்பு ஏற்பட்ட போது, பல ஊர்கள்ல, பாலாஜி போய் களத்துல இறங்கி, மக்களுக்காக சேவை பண்ணிட்டிருந்தார். இங்கே, சென்னைல விருகம்பாக்கம், சுத்தி இருக்கிற என்னோட ஏரியாவுல நான் மக்களுக்கு சாப்பாடு அது இதுன்னு பண்ணிட்டிருந்தேன். அதோட மக்களோட மக்களா நின்னுட்டிருந்தேன்.

அப்ப, பத்து பதினஞ்சு பேர், எல்லாருமே இளைஞர்கள். அவங்க என் கூட வந்தாங்க. அவங்ககிட்ட ஒரே விஷயத்தைச் சொல்லித்தான், வேலை வாங்கினேன். அவங்களும் பதிமூணு நாட்களும் ரொம்ப சின்சியரா மக்களுக்கு எல்லா உதவிகளும் செஞ்சாங்க. ‘மக்களுக்கு நம்மால முடிஞ்ச நல்லதைப் பண்ணுவோம். உங்களையெல்லாம் அஜித் சாரோட போட்டோ எடுக்க வைக்கிறேன்’னு சொல்லித்தான் அவங்களை முழுசா வேலை வாங்கினேன். இன்னும் அவங்களுக்குச் சொன்னதை நிறைவேத்திக் கொடுக்கலை. சீக்கிரமே அஜித் சார் கிட்ட பேசி, அந்தப் பசங்களுக்குச் சொன்ன வாக்குறுதியை நிறைவேத்தணும்.

எல்.கே.ஜி. படத்துல நல்ல நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. எல்லாமே ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிடிச்ச மாதிரி சொல்லியிருக்காங்க. இதுல பாலாஜி படபடன்னு பேசுற வசனங்களையெல்லாம் பார்த்து ஆச்சரியமா இருந்துச்சு. ஒருவேளை, பாலாஜியோட வசனங்களை எங்கிட்ட கொடுத்து பேசச் சொல்லியிருந்தா, ஒருவாரமானாலும் கூட என்னால பண்ணியிருக்க முடியுமான்னு தெரியல. அந்த அளவுக்கு நீளமான வசனங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் சட்டுசட்டுன்னு முகபாவனைகள்னு அசத்தியிருக்கார் ஆர்.ஜே.பாலாஜி'' என்றார்.