லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.

2020ம் ஆண்டு வெளியாக வேண்டிய படத்தை 2021ம் ஆண்டில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கொரோனாவால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும், பார்வையாளர்கள் கூட்டம் பெரிதாக வரவில்லை.

இந்நிலையில்,  மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தீயாய் பரவிய தகவல் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ​ஆனால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் ஓடிடி விற்பனைக்காக பேச்சுவார்த்தை நடப்பது உண்மை தான் என்றாலும், தியேட்டர் ரிலீசுக்குப் பிறகே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யவோம் என உறுதி அளித்தனர். 

மேலும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை திரையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் வெளியாகும் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிக்கான சிறப்பு அனுமதி வழங்கப்படுவது போல், மாஸ்டர் படத்திற்கும் அனுமதி கோரினால் வழங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் டீசர் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு, பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புத்தாண்டு அன்று 'மாஸ்ட்டர்' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும். இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.