​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.இடையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக வதந்தி பரவியது. 

தற்போது அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பு உறுதி அளித்துள்ளது. தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தை தவிர இந்தியிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட உள்ளதால் அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. 

பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு முந்தைய தினமான ஜனவரி 13ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் சமீபத்தில் அதிகார பூர்வ தகவல் வெளியானது. மேலும் முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்யும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளதோடு, இதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சற்று முன்னர் சுடசுட சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் படம் மொத்தம் 74 இடங்களில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு வாழ் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.