இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில், கடைசியாக கடந்த ஆண்டு 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அடுத்து, அவரின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படம் இயங்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கினார். அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறது.

சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். 

இந்நிலையில் மணிரத்னம் தயாரிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் தனா என்பவர் இயக்க உள்ளார். 

நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், நடிகை மடோனா செபஸ்டியன் கதாநாயகியாகவும், விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நீண்ட இடைவேளைக்கு பின், ரியல் ஜோடி நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் கணவன் மனைவியாக இப்படத்தில் நடிக்க உள்ளனர்.