தாங்கள் பிரபலமான பிறகு புதுமுக இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்து ஹிட் காம்பினேஷனையே பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் விரும்புவார்கள். அதிலுருந்து முற்றிலும் வேறுபட்டு தனது படங்களில் இதுவரை 70 புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வியப்பளித்திருக்கிறார் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி.

வரும் 8ம் தேதி தெலுங்கில் ரிலீஸாகும் ‘யாத்ரா’ படம் குறித்துப் பேசிய மம்முட்டி அப்படத்தின் இயக்குநர் மஹி.வி.ராகவ் குறித்துப் பேசும்போது அவர் தனது 70 வது அறிமுக இயக்குநர் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். 80களின் துவக்கத்தில் மலையாள சினிமாவில் அறிமுகமான மம்முட்டி இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்ததில் தனது சுயநலமும் இருந்தது என்றும், ஏற்கனவே வெற்றி பெற்ற இயக்குநர்களை விட புதுமுக இயக்குநர்கள் இன்னும் வீர்யமாக இருப்பார்கள் என்பதால் ஐந்து படங்களில் ஒன்று வீதம் தொடர்ந்து புதுமுகங்களின் படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்ததாகவும் அவர் கூறுகிறார்.

‘யாத்ரா’ ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். அப்படத்தின் போஸ்டர் ட்ரெயிலர்களைப் பார்த்து  ஒய்.எஸ்.ஆரின் தோற்றத்தில் மம்முட்டி அப்படியே அச்சு அசலாகப்பொருந்திருப்பதாக ஆந்திர மக்கள் கொண்டாடிவருகின்றனர். இதே ‘யாத்ரா’ தலைப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் மம்முட்டி ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.