மலேசியாவைச் சேர்ந்த பிரபல பாடகி ஸரித் சோபியா யாசின், என்பவர் கரடிக்குட்டியை வீட்டில் வைத்து வளர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு நாள் ஸரித் சோபியா யாசின், தன்னுடைய பணியை முடித்து விட்டு, இரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அடிபட்ட நிலையில் சிறிய நாய்க்குட்டி போன்ற விலங்கு ரோட்டில் கிடந்துள்ளது.  உடனே அவர் அந்த விலங்கை வீட்டிற்கு எடுத்து வந்து, அதற்கு உரிய சிகிச்சை கொடுத்து வளர்த்து வந்துள்ளார். 

இந்த விலங்கு, வளர வளர தான் அவருக்கு இது, நாய் குட்டி இல்லை... கரடி குட்டி என்பது தெரியவந்தது. எனினும் கரடி குட்டி, அவருடன் அன்பாக பழகி வந்ததால், அதனை விட்டு பிரிய மனம் இல்லாமல் அதனை வீட்டிலேயே வைத்து யாருக்கும் தெரியாத வண்ணம் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த கரடி குட்டி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததை,  இருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.  இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் வனத்துறை அதிகாரிகள் பாடகியின் வீட்டை சோதனையிட்டதில் கரடிக்குட்டி அவரது வீட்டில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.  

கரடி குட்டி என தெரிந்தும், அதனை வனத்துறையினரிடம் ஒப்படைக்காமல் இருந்த குற்றத்திற்காக பாடகி ஸரித் சோபியா யாசினை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.