நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான மகத் அவருடைய காதலி பிராச்சி மிஸ்ராவை அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மகத் காளை, வல்லவன், உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர். மேலும் தல அஜித் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' திரைபடத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்திலும் நடிகர் சிம்புவின் நண்பராக நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியபின், தற்போது ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த சில வருடங்களாகவே  ஃபெமினா மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்து வந்தார். இதனை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது அனைவருக்கும் தெரியும்படி அறிவித்து விட்டு உள்ளே சென்றார். பின் இருவருக்கும் ஒரு சில பிரச்சினைகள் வந்தபோதிலும் மீண்டும் காதலை தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த வருடம் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மஹத் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' மற்றும் 'இவன் தாண்டா உத்தமன்' ஆகிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.