ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O படம் கடந்த  29 ஆம் தேதி வெளியானது.மிகப் பிரமாண்டமாக அதாவது 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கபபட்ட அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதா ? என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.

லைக்கா நிறுவனம் தமிழ்படத் தயாரிப்பில் இறங்கியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பினாமி என்றும், அவர் எப்படி தமிழ் படம் தயாரிக்கலாம் எனவும் கேள்வி எழுந்தது. அப்போது கத்தி படம் வெளியாகும் நேரம். அதனை வெளியிட பல கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரித்தனர்.

ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.  இதையடுத்து லைக்கா நிறுவனத்தின் சார்பில் பல படங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2. 0 படம் ரிலீசாகியுள்ளது..

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படத்தின் ரீலீஸ் தேதியும், சுபாஷ்கரனின் மனைவி பிரேமாவின் பிறந்த நாளும் நவம்பர் 29  தேதி என்பதால், மனைவிக்கு சுபாஷ்கரன் கொடுத்த அறுநூறு கோடி பரிசு என்று அந்தப்படத்தைச் சொன்னார்கள்.

பட வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்தார் சுபாஷ்கரன். அவரது  மனைவி யின் பிறந்த நாளை முன்னிட்டு பெரிய விருந்து நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் கடந்த நவம்பர் 29 அன்று இரவு நடந்தது.

இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தின்போது ,மனைவிக்காக ஒரு பாடல் பாடும்படி சுபாஷ்கரனிடம் கேட்டார்களாம்.

மகிழ்ச்சியான அந்தத் தருணத்தில் தமிழீழ மக்களின் துயரத்தைச் சொல்லும் வகையில் காசிஆனந்தன் எழுதிய ,மாங்கிளியும் மரங்கொத்தியும்…கூடு திரும்பத் தடையில்லை…நாங்கள் மட்டும் உலகத்திலே…நாடு திரும்ப முடியவில்லை…நாடு திரும்ப முடியவில்லை என்ற பாடலைப் கண்ணீருடன் பாடியுள்ளார் சுபாஷ்கரன்..

பல ஆயிரம்  கோடியில் தொழில் செய்யும் தொழிலதிபர் என்கிற நிலையில் இருந்தாலும் அவருடைய ஆழ்மனதில் உள்ள வலி பாடலாக வெளியானதை கேட்டு அந்த மண்டபமே திகைத்து  உருகி நின்றதாம்.