பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் நேற்று முன்தினம் இரவு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  இவர் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.

இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்,  நடிகர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து 'வாலிப ராஜா', '50 50 ' போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்தார்.

நடிகராக ரசிகர்கள் மனதில் நிலைத்து விட்ட போதிலும், தொடர்ந்து மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பல பிரபலங்கள் தங்களின் தோல் பிரச்சனைக்கு இவரை தான் அணுகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஊரடங்கு உத்தரவினால் பலர் இவரின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூழல் இருந்தது.

இது ஒரு புறம் இருக்க, சேதுராமானுடன், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா',  'வாலிப ராஜா'  மற்றும் 'சக்க போடு போடு ராஜா' போன்ற 3 படங்களில் காமெடி நடிகராக நடித்த பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னுடைய தம்பியை இழந்து விட்டதாக மனம் குமுறி பேசியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கூட தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறி கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்... ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய செயலை பார்த்து கிட்ட தட்ட 15 நிமிடங்கள் வரை, சேது சிரித்து கொண்டே இருந்தார் என அவருடனான தன்னுடைய நியாபகங்களை பகிர்ந்துள்ளார்.