தனது நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றிய ஐங்கரன் கருணாமூர்த்தியும் அவரது உதவியாளர் பானுவும் லைகா நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ரூ 120 கோடி மோசடி செய்துவிட்டதாக அந்நிறுவனத்தின் சார்பாக இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

லண்டன் கருணா என்று அழைக்கப்படும் கருணாமூர்த்தி நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து ஐங்கரன் இண்டர்நேஷனல் என்னும்படத்தயாரிப்பு நிறுவனத்தொடங்கி படங்கள் தயாரித்து வந்தார். அந்நிறுவனம் எடுத்த படங்கள் எதுவும் சரியாக ஓடாத நிலையில் தங்கர்பச்சானை வைத்துத் தயாரித்த ‘களவாடிய பொழுதுகள்’படத்தோடு அந்நிறுவனம் படத்தயாரிப்பை நிறுத்திவிட்டு தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு உரிமைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி விற்பதையே முழு நேரத்தொழிலாக மாற்றிக்கொண்டது.

அடுத்ததாக அருண்பாண்டியனை விட்டு வெளியேறிய கருணா, லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரனுடன் இருந்த நெருக்கத்தில் லைகா நிறுவனத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் வந்து அமர்ந்தார். புதிய படங்கள் கமிட் பண்ணுவது, நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பது, செட்டில்மெண்ட் போன்ற எதுவாக இருந்தாலும் கருணாவைத் தாண்டி யாரும் சுபாஷ்கரனை அணுக முடியாது என்ற நிலையே சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது.

இந்நிலையில் நிறுவனம் தொடர்ந்து பலத்த நஷ்டத்தை சந்தித்து வந்ததால் பல விஷயங்களில் சுபாஷ்கரன் தலையிடத்துவங்கினார். நடிகர்களை, இயக்குநர்களை  நேரடியாக லண்டன் வரவழைத்து சந்திக்கத் தொடங்கினார். இதன் மூலம் தனது முக்கியத்துவம் குறைந்ததால் லண்டன் கருணா நிறுவனத்துக்கு விசிட் அடிப்பதைக் குறைத்தார். இதையொட்டி நடத்தப்பட்ட விசாரணையில் பணப்பரிவர்த்தனைகளில் லண்டன் கருணாவும் அவரது உதவியாளர் பானுவும் 120 கோடிக்கும் மேல் கொள்ளையடித்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கும் சுபாஷ்கரன் தன் சார்பாக அலுவலக நிர்வாகிகளை அனுப்பி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் லண்டன் கருணா எந்த நேரமும் கைதாகக்கூடும் என்று தெரிகிறது.