தளபதி 64’படத்துக்குப் பின் லோகேஷ் கனகராஜ் கார்த்தியின் சகோதரர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்குவார் அல்லது மீண்டும் ஒரு விஜய் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அவருக்கு அடுத்த படத்தை இயக்க பெரும் தொகையை அட்வான்ஸாக தந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த மாதத்தில் ரிலீஸான படங்களில் வெற்றிமாறனின் அசுரனும், லோகேஷ் கனகராஜின் ‘கைதியும் அதிரடி வெற்றி கண்டு மகத்தான வசூல் சாதனைகளும் புரிந்துள்ளன. இரு படங்களுமே படத்தயாரிப்பாளருக்கு சுமார் 30 முதல் 40 கோடி வரை சம்பாதித்துத் தந்துள்ளன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜை வளைத்துப்போடுவதற்கு ஏகப்பட்ட ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் முன் வந்த நிலையில் அவர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் விஜய் அவரை விடுவதாக இல்லை. அஜீத் ஹெச்.வினோத்தை வளைத்துப்போட்டது போல் இரண்டாவது பட வாய்ப்பையும் லோகேஷ் கனகராஜுக்கே வழங்க உள்ளார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அந்த இரு செய்திகளையும் இல்லாமல் செய்வது போல் கமலின் ராஜ்கமல் நிறுவனம் ‘கைதி’படம் ரிலீஸான ஒரு சில தினங்களிலேயே லோகேஷை அழைத்து ஒரு பெரும் தொகையை முன்பணமாக தந்து அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். இப்படத்தின் ஹீரோ சாட்சாத் கமலே தான் என்கிறார்கள். இந்தியன் 2’ முடிந்து, ‘தலைவன் இருக்கிறான்’ முடிந்து கமல் வருவதற்கும் லோகேஷ் கனகராஜ் விஜய் படத்தை முடித்து வருவதற்கும் சரியாக இருக்கும் என்பது இரு தரப்பு கணக்கு. அதாவது அடுத்த ஆகஸ்ட் மாதவாக்கில் இப்படம் தொடங்கும் என்கிறார்கள்.