விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி முடித்திருக்கும் ‘கைதி’படம் தீபாவளியன்று வெளியாகவிருக்கும்’பிகில்’படத்துடன் மோதவிருப்பதாக அப்பட தயாரிப்பாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்செய்தி ‘பிகில்’பட வட்டாரத்தை திகிலில் ஆழ்த்தியுள்ளது.

‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. இந்தப் படத்தில் கதாநாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.நரேன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதமே முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்துவருகின்றன.

இப்படம் வெளிவருமுன்பே இப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதற்கடுத்து விஜய் படத்தை இயக்குகிறார் என்று உறுதியான செய்திகள் வெளியானதால் இப்படம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருவதாகச் சொல்லப்படும் இப்படத்தை இவ்வாண்டு தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்களாம். இம்முடிவை முழுக்க முழுக்க தயாரிப்பாளர் தரப்பு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதே நாளில் ஏற்கனவே விஜயின் பிகில் படம் ரிலீஸாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தீபாவளி தினமான ஆகஸ்ட் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால்  23 அல்லது 24ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு மக்களிடம் நல்ல பணப்புழக்கம் இருக்கும் என்பதால் விஜய் பட ரிலீஸ் அவ்வாறு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் அதே நாளிலேயே கார்த்தியின் ‘கைதி’படமும் ரிலீஸாகும் என்று தெரிகிறது.