கடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளை ’கலாயாக’ கொத்துபரோட்டா போட்டு திரைக்கதையாக வடிவமைத்து அரசியல் கலந்த நகைச்சுவை படத்தை பரிமாறியிருக்கிறது எல்.கே.ஜி படக்குழு.

 

சினிமாவை கலாய்த்து தமிழ்படத்தின் முதல் பாகம் வெளியானதைப் போல அரசியலை நய்யாண்டி செய்து உருவாகி உள்ளது எல்.கே.ஜி படம். நக்கல் நய்யாண்டி கலந்த கூட்டணியில் தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலை வைத்து, ஒரு முழுநீள அரசியல் காமெடி படத்தை எடுத்துள்ளார் பாலாஜி. 

எல்.கே.ஜியில் பாலாஜிக்கு அப்பாவாக வரும் நாஞ்சில் சம்பத்தின் நிஜ கேரக்டர் படத்திலும் பிரதிபலிக்கிறது. பல ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் மேடையில் பலமாக முழங்கியும், திறமைகள் இருந்தும் முன்னேற முடியாமல் தவிக்கிறார் நாஞ்சில் சம்பத். இதனால் தந்தையான நாஞ்சில் சம்பத் மீது பாலாஜிக்கு விரக்தியும், வெறுப்பும் ஏற்படுகிறது. லால்குடி டான் கருப்பையா காந்தியான பாலாஜி, அப்பா பிடிக்க முடியாத இடத்தை அடைய துடிக்கிறார். 

சில உள்ளடி வேலைகளை செய்து கவுன்சிலராக முதல் அடி எடுத்து வைக்கிரார். இடைத்தேர்தல் வருகிறது. அதில் வேட்பாளராக களமிறங்கும் பாலாஜியை எதிர்த்து ஜே.கே.ரித்தீஷ் களமிறங்குகிறார். எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வேட்கையில் இருக்கும் பாலாஜி அதற்காக தேர்தல் வேலைகளில் ஸ்கெட் போட்டுக் கொடுக்கும் ஐடி நிறுவனத்தை நாடுகிறார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைவராக வரும் ப்ரியா ஆனந்த், பாலாஜிக்காக சமூக வலைதளங்களில் பல ஜித்து வேலைகளை காட்டி வெற்றிபெற வைக்கிறார். அதற்காக சமூக வலைதளங்களை அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள்.

 

அடுத்து தமிழக முதல்வர் இறந்துவிட, அவரது இடத்தை பூர்த்தி செய்வதற்காக, கட்சிக்குள் பெரும் உட்கட்சி பூசல் வெடிக்கிறது. நள்ளிரவில் பதவியேற்பு, ரிசார்ட்டில் அடைத்து வைப்பு, போன்ற பல அரசியலில் நடந்த அட்ராசிட்டிகளை காட்டி உள்ளனர். முதல்வராக பதவியேற்க இருந்தவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவிட பாலாஜி முதல்வராகி விடுகிறார். வசனங்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இணையான ஊழல் மக்களிடமும் இருக்கிறது. ஓட்டுப்போடும் போது வாங்கும் பணமும் ஊழல்தானே. மீம்ஸ் கிரியேட்டர்கள் நினைத்தால் வள்ளுவனைக்கூட தாலிபான்கள் ஆக்கி விடுவார்கள் போன்ற வசனங்கள் சவுக்கடி.   ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் வந்தாலும் ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. 

ஒரே காட்சியில் பாலாஜி ப்ரபோஸ், செய்ய ஜஸ்ட் லைக் தட் ஆக கடந்து விட்டு போகிறார் ப்ரியா ஆனந்த்.  நாஞ்சில் சம்பத் அடுத்து குணச்சித்திர நடிகராக வலம் வர பெரும் வாய்ப்பிருக்கிறது. முதல்வராக வரும் சிவாஜி ராம்குமார், வேட்பாளராக ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட அனைவரும் தேவையறிந்த்து நடித்திருக்கிறார்கள். 

காமெடி படம் என்பதையும் தாண்டி தேவைக்கு அதிக சிரத்தையுடன் சிறப்பாக ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் விது அய்யன்னா. எத்தனை காலம் தான் ஏமாற்ருவார் என்கிற பாடலை ரீமேக் செய்து தேவைப்படும் நான்கைந்து இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள் மற்றபடி லியோன் ஜேம்ஸின் இசை கவனம் ஈர்க்கவில்லை. 2 மணி நேரம் 04 நிமிடங்கள் நீளமுள்ள பத்தில் எங்கும் அயர்வு இல்லை. 

மொத்தத்தில் படத்திற்கு எல்.கே.ஜி என பெயர் வைத்து விட்டு பி.ஹெச்.டி முடித்திருக்கிறார்கள்.