சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பல்வேறு சமூக அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுவதோடு, காணாமல் போன குழந்தைகளை மீட்டு கொண்டு வரும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். 

இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம்  சென்னை அருகே உள்ள திருப்போரூர் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை, திடீரென காணாமல் போனது. இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் குழந்தை கடத்தப்பட்டதா, என்கிற கோணத்தில் தொடர்ந்து தேடி வந்தனர்.

மேலும் லதா ரஜினிகாந்த் தன்னுடைய அமைப்பின் மூலம் காணாமல் போன குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொண்டு கண்டிப்பாக குழந்தையை மீட்டு தருவதாக ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து குழந்தையை தேடி வந்த போலீசாருக்கும், தன்னுடைய அமைப்பு மூலம் உதவி செய்ததோடு,  மும்பையில் உள்ள பிரபலம் ஒருவர் மூலமாக மும்பை கமிஷனரிடம் பேசி, குழந்தையை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கையை முடுக்கி விட்டார்.  

இந்நிலையில் லதா ரஜினி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குழந்தையை தற்போது கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் தற்போது லதா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.