இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள வடசென்னை திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தை மூன்று பாகங்களாக வெளியிட முடிவு செய்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 
இதற்கிடையில் தனுஷை அடுத்து இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத வகையில் அவர் இயக்குனர் ராம் குமாருடன் இணைய உள்ளதாக செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. விஷ்னுவை வைத்து முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலம் முத்திரை பதித்த ராம் குமார், தற்போது மீண்டும் அவரை வைத்து எடுத்துள்ள படம் ராட்சசன். முதல் படத்தை முழுநீள காமெடி படமாக எடுத்திருந்த ராம்குமார், ராட்சசனை முழு நீள திரில்லர் படமாக கொடுத்து, 
தனக்கும் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடும் வித்தை தெரியும் என்பதை நிரூபித்துள்ளார். இவர் தான் அடுத்து தனுஷை இயக்குகிறார். காமெடி மற்றும் த்ரில்லர் படங்களைத் தொடர்ந்து, தனுஷை இயக்குனர் ராம் குமார் கையாள உள்ள களம் ஃபேண்டஸி அட்வெஞ்சர். இந்தப் படத்தின் கதை முழுவதும் பயணம் சார்ந்து தனுஷை சுற்றியே கதை நடக்கும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக ராம்குமார் அறிவித்திருந்தார். ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது. 
தற்போது இந்தப் படத்தில் லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அவர், தமிழ் திரையுலகில் தோன்றி நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த நிலையில் தான் தனுஷின் அடுத்த படத்திற்கு அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீண்ட வருடத்திற்குப் பின், தமிழ் திரையுலகில் லட்சுமி மேனன் தோன்றவுள்ள நிலையில், தனுஷுடன் அவர் முதன் முறையாக இணையவுள்ளது தனுஷின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்கள் அனைவருடனும் நடித்து ஒரு ரவுண்ட் வந்த லட்சுமி மேனன் தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு முன்னணி இளம் நடிகரான தனுசுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர முடியும் என்று லட்சுமி நம்புகிறார்.
