மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர்  திரைப்படப்பணிகள் நடைபெற்றுவந்த அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றைப் பெட்ரோல் ஊற்றிக்கொளுத்தியதில் 24க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் 35க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்டது.இந்த ஸ்டூடியோவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் மர்ம நபர், கட்டிடத்தை சுற்றி பெட்ரோல் போன்ற திரவத்தினை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அந்த கட்டிடம் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 70 பேருக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். தீ மளமளவென பரவியதில் கட்டிடம் முழுவதும் எரிந்துள்ளது. இதில் உடல் கருகி 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும்,  35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படுகாயமடைந்தவர்களுள் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவரும் தீக்காயம் ஏற்பட்டநிலையில் சம்பவ இடத்திலேயே போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். முதல்கட்ட விசாரனையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.