எம்.ஜி.ஆருக்கு பின்னர் சினிமாவில் இருந்து யாரும் அரசியல் வானில் ஜொலிக்கவில்லை. எனவே அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.டி.லஷ்மிகாந்தன் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து விரைவில் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் இந்தி, ஆங்கில மொழிகளில் இருக்கக்கூடாது. அந்தந்த மாநிலங்களில் தாய்மொழியில் இருக்க வேண்டும். 

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் களமிறங்கியிருப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. வேலூரில் உள்ள கோட்டையை வேண்டுமென்றால் அவர்கள் பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் வேலூரில் நிறைய சினிமா தியேட்டர்கள் உள்ளன. அங்கு சென்று ரஜினியின் படத்தை பார்த்துவிட்டு அவர்கள் வருவது நல்லது.

அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆருக்கு பிறகு சினிமாவில் இருந்து யாரும் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை என்பதையும் அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது வீண் முயற்சி என்பதே அவரது ரசிகனாக நான் சொல்லும் ஆலோசனை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.