கேரளாவில் நடந்த சினிமா படப்பிடிப்பில், நடிகை நயன்தாரா பயன்படுத்திய சொகுசு வேனில், அவரது பெர்சனல் அறைக்குள் சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர். இதனால் படப்பிடிப்பு குழு அதிர்ச்சி அடைந்தது.

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாளப் படத்தில் நயன் தாரா நடித்துவருகிறார்.  அப்படப்பிடிப்புக்காக  நடிகை நயன்தாரா மற்றும் நடிகர்கள் நிவின் பாலி, தயன் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்காக மூன்று கேரவன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.  ஆனால் இது அவர்களுக்கு சொந்தமானது கிடையாது என கூறப்படுகிறது. எனவே படப்பிடிப்பை முன்னிட்டு வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 19 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில், மிக பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன சொகுசு வேனை, நடிகை நயன்தாரா பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில், வேனில் நயன்தாரா தனது அந்தரங்க அறையில்  ஓய்வெடுத்தபோது, சாலை போக்குவரத்து அதிகாரிகள் சிலர், அங்கு வந்தனர். நயன் வேனிலிருந்து கீழே இறக்கப்பட்டார். பின்னர் அதிகாரிகள் அந்த மூன்று வேன்களிலும், அதிரடி சோதனை நடத்தினர். இதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த வேன்களுக்கு வரிகள், செலுத்தப்படாமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வேன்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூன்று வேன்களுக்கும் சேர்த்து, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்திய பின், வேன்கள் விடுவிக்கப்பட்டன. இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பலபேர் முன்னிலையில் வேனில் இருந்து இறக்கப்பட்டதால் அப்செட் ஆன நயன்தாரா அடுத்து ஒன்றிரண்டு ஷாட்களில் மட்டுமே நடித்துவிட்டு மூட் அவுட்டுடன் படப்பிடிப்பை விட்டு வாக் அவுட் செய்ததாகக் கூறப்படுகிறது.