இந்திய பட்ஜெட் வரலாற்றில் முதல்முறையாக, கேரள அரசு  சினிமாவில் இருக்கும் பெண்களின் மறுமலர்ச்சிக்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்  இன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தில் இதை அறிவித்தார்.

பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்,’’கேரள சினிமாவில் சமீபகாலமாக செயல்பட்டுவரும் பெண்கள் விழிப்புணர்வு குழுவினருக்கு மேலும் ஊக்கமளிக்கவும்,  திரைத்துறையில் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும் இத்தொகை பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

இந்தியா முழுக்க ‘மி டூ’ விவகாரம் சூடுபிடிக்க காரணமே கேரள நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் பலாத்கார சம்பவம்தான். அச்சம்பவத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கேரள திரையுலகைச் சேர்ந்த பெண்கள் சிலர் ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’[WCC] என்ற அமைப்பைத் தொடங்கி தொடர்ந்து போராடி வருகின்றனர்.  அந்த அமைப்பின் செயல்பாட்டுக்குப் பின்னர்தான் ‘மி டு’ விவகாரம் இந்தியா முழுக்க பிரபலமானது. இதே அமைப்புதான் கேரள அரசிடம் பெண் திரைக்கலைஞர்களுக்காக சிறப்புத்தொகை ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி இன்று மூன்று கோடி ஒதுக்கி பிரனாயி விஜயனின் அரசு அறிவித்துள்ள நிலையில் மலையாள சினிமா எடிட்டரும், ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ உறுப்பினருமான பீனா பால்,’ அரசின் இந்த அறிவிப்பு எங்கள் அமைப்புக்கு மாபெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. இந்தத் தொகை குறிப்பிட்ட காரியத்துக்காக என்று அறிவிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக குரல் கொடுக்க உதவும். 3கோடி என்பது சிறு தொகைதானே ஒழிய இதற்கு மனமுவந்து உதவ முன்வந்த கேரள அரசின் மனசு பெருசு’என்று புகழ்கிறார்.