சபரிமலை பிரச்சனைக்கு ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் போன்ற அமைப்புகளே காரணம் என்றும் பிற கோயில்களைப்போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில் மாதாந்திர பூஜைக்காக நேற்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சில பெண்கள் சபரிமலை செல்ல 
வந்தனர். ஆனால், போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். நிலக்கல் பகுதியில் நேற்று நடந்த கலவரம் காரணமாக சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வரும் 22 ஆம் தேதி வரை இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று அம்மாநில அரசால் கூறப்பட்டிருந்தாலும், சபரிமலைக்கு வரும் பெண்களை, பக்தர்கள் திருப்பி அனுப்பி வந்தனர். பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரையுமே அவர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். தங்கள் உயிரே போனாலும், ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் ஆவேசமாக கூறி வருகின்றனர்.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்பதாலேயே முதலமைச்சர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் அதற்கு தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, முதலமைச்சர் பினராயி விஜயன், தனது டுவிட்டர் பக்கத்தில், சபரிமலை பிரச்சனைக்கு ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் போன்ற அமைப்புகளே காரணம் என்று கூறியுள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், மஹாராஷ்டிராவில் உள்ள சனி ஷிங்கனபூர் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. மும்பை உயர்நீதிமன்றம், பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை அனுமதிக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சபரிமலை பிரச்சனைக்கு ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் போன்ற அமைப்புகளே காரணம். பிற கோயில்களைப்போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.