நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலத்தில், வளர்ந்து வரும் நடிகர்களான விக்ரம் பிரபு, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும், 'ரஜினி முருகன்' வெற்றிக்கு பிறகு, முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே கட்டம் கட்டி கமிட் ஆனார்.

குறிப்பாக விஜயுடன் இரண்டு படம், சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால் தெலுங்கில் நானி, பவன் கல்யாண், துல்கர் சல்மான் என இவரின் கதாநாயகன் பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவருமே வளர்ந்த நடிகர்கள் தான். 

இதனால், இவர் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க நோ சொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்பட்டது.

இதனை பொய்யாக்கும் விதமாக தற்போது, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஆதிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படம் குறித்த அதிகார பூர்வா அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 'ஹைதராபாத் ப்ளூஸ்' மற்றும் 'இக்பால்' போன்ற படங்களை இயக்கிய நாகேஷ் குகுனூர் என்ற பாலிவுட் இயக்குனர் தெலுங்கில் இயக்கும் 'ஸ்போர்ட்ஸ்' படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இதில் கீர்த்திக்கு ஜோடியாக நடிகர் ஆதி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜெகபதி பாபு மற்றும் ராகுல் ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள்.