நடிகை கீர்த்திசுரேஷ் நடித்துள்ள படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் சர்கார் படம் தப்பிக்குமா என்று விஜய் ரசிகர்கள் சென்டிமென்டாக பீதியில் உள்ளனர். நடிகர் விஜய் கீர்த்தி சுரேசுடன் இணைந்து முதன்முறையாக நடித்த திரைப்படம் பைரவா. தெறி எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளியானது இந்த பைரவா. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் பிறகு விஜய் நடித்து வெளியான மெர்சல் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளி விருந்தாக சர்கார் வெளியாக உள்ளது. இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே கீர்த்தி சுரேஷூடன் விஜய் ஜோடி போட்ட பைரவா படம் வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்ததை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்கவில்லை. இந்தநிலையில் தான் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன. 

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் கீர்த்தி சுரேஷ் கெஸ்ட் அப்பியரிங் செய்திருப்பார்.  தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சீமராஜா எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதே போல் விக்ரம் – ஹரி கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சாமி 2 படமும் படு தோல்வி அடைந்தது. இந்த படத்திலும் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். போதாக்குறைக்கு சண்டக்கோழி 2 படத்திலும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தான். படம் வெளியாகி ரசிகர்களை கவரவில்லை. 

தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் ரசிகர்களை கவரவில்லை. இந்த சென்டிமென்ட் விஜயின் சர்கார் படத்திற்கும் பொருந்திவிடுமோ என்று விஜய் ரசிகர்கள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்த விவகாரங்களை சுட்டிக்காட்டி அஜித் ரசிகர்கள் நிச்சயமாக கீர்த்தி சுரேஷ் ராசியால் சர்கார் தோல்வி அடையும் என்று பதிவு போட்டு வருகின்றனர்.