பிக்பாஸ் கவின் ஏற்கனவே நடிகை ரம்யா நம்பீசனுடன், 'நட்புனா என்னனு தெரியுமா' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இரண்டாவதாக நடித்து வந்த திரைப்படம் 'லிப்ட்'.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மோஷன் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மாலை 5 மணிக்கு, இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப் குமார், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து, மற்றும் ஆர்.ரவிக்குமார் உள்ளிட்ட 6 இயக்குனர்கள் இணைந்து வெளியிட உள்ளனர். இது குறித்த தகவலை நடிகர் கவின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் உருக்கமான நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது படமாக உருவாகி வரும் இப்படத்தில் , கவினுக்கு ஜோடியாக 'பிகில்' படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நடிக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் போஸ்டர் வெளியான போது, இப்படம் கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் சார்ந்த கதையாக இருக்கலாம் என்பது தெரிந்தது.  இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபலமாகி, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி - லாஸ்யா என இருவரின் காதல் சர்ச்சையில் சிக்கி, தற்போது நடிப்பில் மும்முரமாக கவனம் செலுத்தி வரும் கவினுக்கு 'லிப்ட்' படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.